பரமக்குடி தாலுகா அலுவலகம் வளாகத்தில் இடிந்த கட்டடம்
பரமக்குடி தாலுகா அலுவலகம் வளாகத்தில் இடிந்த கட்டடம்
ADDED : ஆக 24, 2026 04:31 PM
அச்சத்தில் மக்கள், ஊழியர்கள்
பரமக்குடி: பரமக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் இடிந்த நிலையில் உள்ள பழைய ஓட்டு கட்டடத்தால் ஊழியர்கள்,மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
பரமக்குடி, இளையான்குடி ரோட்டில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை ஒட்டியுள்ள சார்நிலை கருவூலம் பழைய ஓட்டு கட்டடத்தில் இயங்கியது. தொடர்ந்து சில ஆண்டுகளில் தாலுகா அலுவலக புதிய கட்டடத்தின் பின்புறம் சார்நிலை கருவூலம் செயல்பட துவங்கியது.
ஆனால் ஓட்டு கட்டடம் இன்றளவும் இடித்து அகற்றப்படாமல் இருக்கிறது. இதையொட்டி பரமக்குடி கிளை சிறைச்சாலை செயல்படுகிறது. தொடர்ந்து பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள் மற்றும் அருகில் உள்ள சிறைச்சாலை உட்பட வி.ஏ.ஓ., மற்றும் இ-–சேவை மையத்திற்கு வருவோர் ஓட்டு கட்டடத்தின் அருகில் அமருகின்றனர்.
இதன்படி தினமும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அங்கு ஒதுங்கும் சூழலில் ஆபத்து காத்திருக்கிறது. தொடர் மழையின் போது அவ்வப்போது ஓட்டு கட்டடம் இடிந்து விழுகின்றன. இதனால் பெரிய ஆபத்து நிகழும் முன் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
