ADDED : மார் 20, 2025 07:03 AM
திருவாடானை: திருவெற்றியூர் செல்லும் டவுன் பஸ் நடுவழியில் பஞ்சராகி நின்றதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு டவுன்பஸ் செல்கிறது. வழக்கமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து புறப்பட்டு ஏ.ஆர்.மங்கலம் வழியாக திருவாடானை பஸ் ஸ்டாண்டிற்கு மாலை 4.50 மணிக்கு வரும்.
பள்ளி விடும் நேரம் என்பதால் ஆதியூர், அரும்பூர், குளத்துார், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் அந்த பஸ்சில் செல்வார்கள்.
நேற்று திருவாடானைக்கு இந்த பஸ் வரவில்லை. ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து புறப்பட்டு வந்த போது நடுவழியில் பஞ்சராகி நின்று விட்டது.
இதனால் அந்த பஸ்சுக்காக திருவாடானை பஸ்ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், மாணவர்கள் ஆட்டோக்களில் சென்றனர்.
பயணிகள் கூறுகையில், அரசு பஸ்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் நடுரோட்டில் நிற்பது தொடர்கிறது. போக்குவரத்து அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.