ADDED : செப் 12, 2026 04:46 AM

கீழக்கரை: மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் அதிகமாக கணவாய் மீன்கள் பிடிபடுகின்றன. கணவாய் மீன்களின் ஓடு கால்சியம் சத்து நிறைந்த ஒரு இயற்கை அமைப்பாகும்.
பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் உணவிற்கு பயன்படுகிறது. வீடுகளில் கூண்டில் வளர்க்கப்படும் லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பறவைகள் மற்றும் புறா உள்ளிட்டவைகளுக்கு கணவாய் மீன் ஓடுகள் வழங்கப்படுகின்றன. பறவைகள் தங்கள் அலகை கூர்மையாக்கவும், சீரமைக்கவும் இதை உரசி பயன்படுத்திக் கொள்கின்றன. கணவாய் ஓடு அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதால் பொற்கொல்லர்கள் இதில் எளிதாக உருவங்களை செதுக்கி, உருகிய தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை ஊற்றி சிறிய நகைகள் மற்றும் சிற்பங்களை வார்ப்பதற்கும் அச்சாக பயன்படுத்துகின்றனர்.
ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் இதன் பொடி அமில நீக்கியாகவும், பல்பொடிகளிலும், தோல் சார்ந்த சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. பழைய காலத்தில் உலோகம் மற்றும் மரப்பொருள்களை உரசி மெருகூட்டவும் அதன் பொடியை சுத்தப்படுத்தும் பொருளாகவும் பயன்படுத்தி உள்ளனர். கணவாய் ஓட்டை பொடியாக்கி மண் கலவையில் சேர்ப்பதன் மூலம் செடிகளுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.
ஒரு கிலோ கணவாய் ஓடு ரூ.500 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடலில் இருந்து மீன் பிடித்து வரும் மீனவர்களிடமிருந்தோ அல்லது கடலோரப் பகுதியில் இருந்து மீனவர்களிடம் கணவாய் ஓடுகள் சேகரிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
