/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்து முனை ரோட்டில் கால்நடைகளால் ஆபத்து
/
ஐந்து முனை ரோட்டில் கால்நடைகளால் ஆபத்து
ADDED : மார் 18, 2025 06:48 AM

பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் கூட்டமாக திரியும் கால்நடைகளுக்கு மத்தியில், சிக்னலும் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் செல்கின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் பிரதான பகுதியாக ஐந்து முனை ரோடு இருக்கிறது. மதுரை, ராமநாதபுரம், இளையான்குடி, முதுகுளத்துார், உழவர் சந்தை பகுதிகளை இணைக்கிறது. இப்பகுதியில் முதுகுளத்துார் ரோட்டில் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல சப்வே மற்றும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இடியாப்ப சிக்கல் இருக்கும் இப்பகுதியில் வாகனங்களை முறைப்படுத்த சிக்னல் வசதி கிடையாது. இங்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட போலீஸ் நிர்வாகத்தால் சிக்னல் அமைக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
ஆனால் அமைத்த சில மாதங்களில் பழுதாகி விளக்குகள் அனைத்தும் காணாமல் போனது. தற்போது இப்பகுதியில் கால்நடைகள் காலை நேரங்களில் மட்டுமல்லாது, இரவிலும் கூட்டம், கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதும் நிலை உள்ளது.
எனவே கால்நடைகளை ரோடுகளில் திரிய விடாமல் தடுக்க வேண்டும். மேலும் மின்விளக்கு வசதிகளை அதிகப்படுத்துவதுடன் சிக்னல் விளக்குகளை அமைத்து முறையான போக்குவரத்திற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.