/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரம் கசியும் காவிரி கூட்டு குடிநீர்
/
ரோட்டோரம் கசியும் காவிரி கூட்டு குடிநீர்
ADDED : மார் 21, 2025 06:35 AM

பரமக்குடி : பரமக்குடி, முதுகுளத்துார் ரோட்டோரம் காவிரி கூட்டு குடிநீர் கசிந்து குளம் போல் தேங்கும் நிலையில் அந்த நீரை குடிக்கும் மக்களுக்கு நோய் அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் தாகம் தீர்க்கும் வரப்பிரசாதமாக காவிரி கூட்டு குடிநீர் உள்ளது. பரமக்குடி துவங்கி அருகில் உள்ள முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி என அனைத்து கிராமங்களிலும் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ரோட்டோரங்களில் பெரிய ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனை முறைப்படுத்த ஆங்காங்கே வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வால்வு தொட்டிகளில் கசியும் நீரை அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் தண்ணீர் வராத நாட்களில் எடுத்து பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் முதுகுளத்துார் ரோட்டோரம் நான்கு வழிச்சாலை அருகில் உள்ள வால்வு ஒட்டுமொத்தமாக மூழ்கி அடிக்கடி குழாயில் சேதம் ஏற்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் அங்கு குளம் போல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.
இந்த நீர் மீண்டும் குழாய்கள் வழியாக மக்கள் பயன்படுத்தும் படி செல்வதால் தொற்று நோய் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் ரோட்டோரம் செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் சூழல் உள்ளது. குடிநீர் குழாயை சீரமைக்கும் போது வால்வுகளில் மீண்டும் தண்ணீர் செல்லாத படி தொட்டிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.