/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிடப்பில் காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்தம்
/
கிடப்பில் காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்தம்
கிடப்பில் காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்தம்
கிடப்பில் காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்தம்
ADDED : ஜன 03, 2025 11:32 PM
ராமநாதபுரம்:நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்தகதியில் நடப்பதால் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
காவிரி, வைகை, குண்டாறு ஆறுகளை இணைத்து வெள்ளக்கால்வாய் அமைத்து காவிரியில் வீணாக கடலில் கலக்கும் நீரை திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் 2021 பிப்.,19 ல் அப்போதைய முதல்வர் பழனிசாமியால் ரூ.14 ஆயிரம் கோடியில் துவக்கப்பட்டது.
இதற்காக ரூ.6941 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் வெள்ளக்காலங்களில் காவிரியில் வீணாக கடலில் கலக்கும் 6300 மில்லியன் கன அடி நீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடப்படும். இத்திட்டம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
முதற்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனுார் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் வெள்ளாறு வரை 118.5 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
2வது கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறில் இருந்து 109 கி.மீ., கால்வாய் அமைத்து சிவகங்கை, மாவட்டம் வைகை ஆற்றில் இணைக்கப்படும். இதன் மூலம் பதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள 220 ஏரிகள் மூலம் 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
3வது கட்டமாக விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 34 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு கிருதுமால் நதி மற்றும் குண்டாறுடன் இணைக்கப்பட்டு 492 ஏரிகள் மூலம் 44 ஆயிரத்து 574 ஏக்கர் பாசனம் பெறும். தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்த கதியில் உள்ளன. அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் இத்திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராம.முருகன் கூறியதாவது: நிலம் கையக்கப்படுத்தும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடக்கிறது.
இதனால் கால்வாய் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்து 3 பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் பணிகளை துவக்கி விரைவுபடுத்தினால் மட்டுமே இத்திட்டம் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது என்றார்.