/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கோலாகலம்
/
விநாயகர் கோயில்களில் சதுர்த்தி விழா கோலாகலம்
ADDED : ஆக 28, 2025 04:39 AM

ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் பிரஷ்திடை செய்தும் வழிபாடுகள் நடந்தது.
ராமநாதபுரம் சிவன்கோயில், குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி சொர்ண விநாயகர், வழிவிடு முருகன்கோயில், கோட்டை விநாயகர் கோயில், சந்தை திடல் அருகேயுள்ள வல்லபை விநாயகர் கோயில், நொச்சியூருணி சொர்ண விநாயகர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் செல்வராஜ மகா கணபதி கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், பட்டணம்காத்தான் 'டி' பிளாக் மங்கள விநாயகர் கோயிலில் ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். வழுதுார் அருளொலி விநாயகர் கோயிலில் பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் அபிேஷகம் செய்தனர்.
காவனுார் சித்திவிநாயகர், அழகன் குளம் நர்த்தன விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுண்டல், கொழுக்கட்டை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பூக்குழி இறங்கிய பக்தர்கள் ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில், பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழா, ஆக.18 இல், கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற விழாவில், தினமும் மாலையில், வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
விழாவின் எட்டாம் நாளான ஆக.25 இல் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.
முன்னதாக, கோயிலில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள மோர்ப்பண்ணை கடலில், பக்தர்களுடன் புனித நீராடிய விநாயகர், அங்கிருந்து காளை வாகனத்தில் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தார்.
தொடர்ந்து பக்தர்கள் கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர் . பின்னர், மூலவருக்கு நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து கவசம் சாற்றி மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில் விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பரமக்குடி ஈஸ்வரன் கோயில் விநாயகர் சன்னதியில் அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைகள் நடந்தன. மாலையில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார்.
இதேபோல் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் விநாயகர் வழிபாடு செய்ய களிமண் விநாயகரை ஆர்வமுடன் மக்கள் வாங்கிச் சென்றனர்.
ஹிந்து முன்னணி சார்பில் பரமக்குடி நகர் முழுவதும் 57 இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதுடன், திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெருமாள் கோயில் படித்துறையில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வல்லபை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. யாகபூஜையுடன், மூலவர் விநாயகருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
* உத்தரகோசமங்கை அருகே களக்குடி கிராமத்தில் உள்ள பாலகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலையில் களக்குடி அய்யனார் கோயிலில் உள்ள ஊருணிக்கு பிள்ளையார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது.
* கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் உள்ள கனவில் வந்த கணேசர் கோயில் மூலவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கனவில் வந்த கணேசர் கோயில் விழா குழுவினர் செய்தனர்.
இதுபோன்று கோகுலம் நகர் மகாகணபதி கோயிலில் சுவாமிக்கு அபி ேஷகம் செய்து, பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, செரி பழம் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
*திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சித்தி விநாயகருக்கு, பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். கொழுக்கட்டை, அவல், பொரிகடலை வைத்து நைவேத்தியம் செய்தனர். ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்தனர்.
* சாயல்குடியில் உள்ள பங்களா மேடு நேதாஜி நகரில் செல்வவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இரவில் வள்ளி திருமண நாடகம் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்டவை நடந்தது. ஏற்பாடுகளை நேதாஜி நகர் இளைஞர் அணியினர் செய்தனர்.
பால்குட ஊர்வலம் கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் நீதிமன்றம் அருகே வேப்பமரத்தடி காட்டு விநாயகர் கோயிலில் ஐந்தாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.இதனை முன்னிட்டு கோட்டை முனீஸ்வரர் கோயிலில் இருந்து கோயில் பூஜாரி சுந்தர் உற்ஸவர் விநாயகர் சிலையுடன்,காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உட்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்பு விநாயகருக்கு 21 வகையான அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது.பக்தர்கள் கொழுக்கட்டை,சுண்டல், பொரிகடலை படையலிட்டு வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர், தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது.
திருவாடானை கைலாச விநயாகர் வெள்ளி கவசத்தில் அலங்கரிக்கபட்டார். பாரதிநகர் கற்பக விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
இரவில் கலைநிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது. தொண்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
சின்னத்தொண்டியி லிருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று தொண்டி கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.