தனுஷ்கோடியில் சோதனைச்சாவடிகள் சேதம்: கேள்விக்குறியான பாதுகாப்பு
தனுஷ்கோடியில் சோதனைச்சாவடிகள் சேதம்: கேள்விக்குறியான பாதுகாப்பு
ADDED : ஜூன் 22, 2026 02:46 AM

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் போலீஸ் சோதனை சாவடி இடிந்து கிடக்கிறது. பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் 38 கி.மீ.,ல் உள்ளது. இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கி.மீ.,ல் 6ம் மணல் தீடையுடன் இந்திய எல்லை முடிவடைகிறது. இந்த குறுகிய எல்லை பகுதி வழியாக தமிழக, இலங்கை கடத்தல்காரர்கள் தடையின்றி ஊடுருவுகின்றனர். இந்த கடத்தல்காரர்களுடன், பயங்கரவாதிகள் ஊடுருவும் அபாயம் இருந்தது.
இதனால் மண்டபம், தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு அதிவேக ரோந்து படகுகள் வழங்கப்பட்டன. மேலும் பாம்பன் பாலம் கிழக்கு நுழைவு வாயில், ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரை சாலை, வேர்க்கோடு, தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் போலீசாரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடத்தல், ஊடுருவல் தடுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் சோதனைச் சாவடிகளுக்கு போலீசார் நியமிக்கவில்லை. தனுஷ்கோடியில் போலீசார் 24 மணி நேரமும் தங்குவதற்காக அமைத்த கன்டெய்னர் ஓய்வறை உடைந்து கிடக்கிறது. ஒரு போலீஸ் கூட பணியில் இல்லை. வேர்க்கோடு, பாம்பன், ஓலக்குடா ஆகிய முக்கிய சோதனைச் சாவடிகளிலும் போலீசார் இல்லை. இதனால் கடத்தலும் ஊடுருவலும் அதிகரித்துள்ளது.
எனவே த.வெ.க., அரசு சோதனைச் சாவடிகளுக்கு போலீசாரை பணியமர்த்தி கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கடத்தல்காரர்கள், அன்னியர்கள் ஊடுருவலை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
