ADDED : மே 28, 2025 12:50 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு கிலோ எடையுள்ள நாட்டுகோழி ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிராமங்களில் ஆடு, மாடுகளுடன் கோழி வளர்ப்பில் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
கடும் வெயிலால் திருவாடானை சுற்றுவட்டாரகிராமங்களில் வெக்கை நோய் தாக்கி கோழிகள் இறக்கின்றன.
திருவாடானை மேலரதவீதி மக்கள் கூறுகையில், நாட்டுக் கோழி இறைச்சியில் அதிக புரதம் மற்றும் நார்சத்து உள்ளதால் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிக லாபம் இருப்பதால் கோழி வளர்ப்பில் ஆர்வமாக உள்ளோம். திருவாடானை பகுதியில் ஏராளமானோர் கோழி வளர்க்கின்றனர்.
இரவில் கூண்டுகளில் அடைத்து விட்டு மறுநாள் காலை திறந்து பார்க்கும்போது கோழிகள் இறந்து கிடக்கின்றன. ஒரு வாரத்தில் இத்தெருவில் 100க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. கிராமங்களிலும் ஏராளமான கோழிகள் இறக்கின்றன.
நாளுக்கு நாள் கோழிகள் இறப்பு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. எனவே கால்நடை மருத்துவர்கள் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தி கோழி இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.