ADDED : டிச 30, 2024 11:36 PM

ராமநாதபுரம்: சி.என்.ஜி.,(சுருக்கப்பட்ட எரி வாயு)காஸ் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் எரிவாயுக்கு மாற்றாக சி.என்.ஜி., காஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 சதவீதத்திற்கும் மேலான ஆட்டோக்கள் இந்த காஸ் மூலம் இயங்கி வருகின்றன. அரசு போக்குவரத்துக்கழகத்தில் சோதனை அடிப்படையில் சி.என்.ஜி., காஸ் நிரப்பப்பட்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சி.என்.ஜி., காஸ் கிலோ ரூ.81. மேலும் பெட்ரோலை காட்டிலும் அதிகமாக மைலேஜ் தருவதால் சி.என்.ஜி., காஸ் வாகனங்கள் அதிகமாக பயன்பாட்டுக்கு வருகின்றன. இரு சக்கர வாகனங்களும் காஸ் மூலம் இயக்கப்படும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காற்றில் மாசு ஏற்படாமல் இருப்பதற்காக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.என்.ஜி., காஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தொழிற்சங்க நிர்வாகி பாஸ்கரன் கூறுகையில், ''காஸ் நிரப்பும் பங்குகள் மிகக் குறைவாக உள்ளன. ஒரு ஆட்டோவுக்கு காஸ் நிரப்ப 15 நிமிடங்களாகிறது. இதனால் அவசரத்திற்கு ஆட்டோக்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த வாரம் முழுவதும் சி.என்.ஜி., காஸ் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சி.என்.ஜி., நிரப்பும் நிலையங்களை அதிகப்படுத்தி காஸ் தட்டுப்பாடில்லாமல் வழங்க வேண்டும் என்றார்.