ADDED : செப் 01, 2026 07:51 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார், கமுதி ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.
கமுதி அருகே செங்கொடி நகர் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கான பாதை வசதி குறித்து ஆய்வு செய்து அதற்கு ஆவணத்தை வழங்கினார். பெரிய உடப்பங்குளம், கோட்டைமேடு, நாராயணபுரம் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். முதுகுளத்துார் ஒன்றியம் கண்ணாத்தான் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை துவக்கி வைத்தார்.
பின் விளக்கனேந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி பண்ணையை பார்வையிட்டு பராமரிக்கப்பட்ட மரக்கன்று விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளக்கனேந்தல் ஊராட்சி நர்சரி பண்ணையில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உடன் தாசில்தார் கோகுல்நாத், பி.டி.ஓ.,க்கள் பிரியதர்ஷினி, முருகானந்தவள்ளி, மேகராஜ், சந்திரசேகர் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் இருந்தனர்.
–––
