/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை மாலைக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
/
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை மாலைக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை மாலைக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை மாலைக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 09, 2025 03:18 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள் அனைத்து இடங்களிலும் மாலை 6:00 மணிக்கு முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். கலெக்டர் கூறியதாவது:
விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் குழாய் வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலை, மாலை நேரங்களில் பூஜை செய்யப்படும் நேரங்களில் முறையே இரண்டு மணிநேரம் ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.
அனைத்து ஊர்வலங்களும் மாலை 6:00 மணிக்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். போலீசார் அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட வேண்டும். சிலையின் உயரமானது 10 அடிக்கு மேல் இருக்ககூடாது என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தவச்செல்வம், ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் குணால் உத்தம் ஷ்ரோதே, மீரா, கூடுதல் எஸ்.பி., சுப்பையா பங்கேற்றனர்.

