ADDED : ஜூலை 18, 2025 11:46 PM

ராமநாதபுரம்: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்கூட்டாம்புளியில் உள்ள செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்கள் அடங்கியகல்லுாரி சந்தை,கண்காட்சி துவக்க விழா நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து சந்தையை திறந்து வைத்து கூறியதாவது: மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்கப்படுத்த அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்திடும் வகையில் இந்த கண்காட்சி நடக்கிறது.
மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு 7 மகளிர் கல்லுாரிகளில் நடத்த திட்டமிட்டு முதல் கண்காட்சியாக செய்யது அம்மாள் கல்லுாரியில் துவங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 32 மகளிர் குழுக்கள் ஒருங்கிணைந்து 35 அரங்குகளில் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷு நிகம், மகளிர் திட்ட உதவி அலுவலர் தங்கப்பாண்டியன், செய்யது அம்மாள் கல்லுாரி செயலர் பாரூக் அப்துல்லா, முதல்வர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.