ADDED : மார் 18, 2025 11:06 PM
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்காண்டு ஊராட்சிக்கு உட்பட்ட 14 குக்கிராமங்களில் ஆறு மாதமாக தொடர் மின்தடை நிலவுகிறது.
மாவட்டத்தில் அதிகளவு தென்னந்தோப்புகள் நிறைந்த இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வயல்வெளிகளில் மின்மோட்டார் மூலம் தென்னந்தோப்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது : கடந்த ஆறு மாதங்களாக அடிக்கடி வீடுகள் மற்றும் தோட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மின்தடையால் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து ரெகுநாதபுரம் மின்வாரியத்தில் புகார் அளித்தாலும் மெத்தனமாகவே உள்ளனர்.
இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு கூட வழியில்லாத நிலை உள்ளது. எனவே ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் கூடுதல் மின் பணியாளர்களை நியமித்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.