/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்டத்தில் குற்ற வழக்கு பதிவு குறைவு: சந்தீஷ் எஸ்.பி.,
/
மாவட்டத்தில் குற்ற வழக்கு பதிவு குறைவு: சந்தீஷ் எஸ்.பி.,
மாவட்டத்தில் குற்ற வழக்கு பதிவு குறைவு: சந்தீஷ் எஸ்.பி.,
மாவட்டத்தில் குற்ற வழக்கு பதிவு குறைவு: சந்தீஷ் எஸ்.பி.,
ADDED : ஜன 09, 2025 04:57 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023 ம் ஆண்டை விட 2024 ல் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக சந்தீஷ் எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
கடந்த 2023 ல் பதிவான கொலை வழக்குகளை விட 16 சதவீதம் குறைந்து 2024 ல் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செயின் பறிப்பு வழக்குகள் 19 என்பது 2024 ல் 5 வழக்குகள் மட்டும் பதிவாகி 74 சதவீதம் குறைந்துள்ளது. கற்பழிப்பு வழக்கு 9 வழக்குகள் பதிவான நிலையில் 2024 ல் 2 வழக்குகள் மட்டுமே பதிவானது.
கொலை முயற்சி வழக்குகள் 67 என்பது 2024 ல் 37 சதவீதம் குறைந்து 42 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கலவர வழக்குகள் 2023 ல் 73 வழக்குகள் பதிவாகின. 2024 ல் 86 சதவீதம் குறைந்து 10 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
வீட்டை உடைத்து திருட்டு, இதர திருட்டுகள் 2024 ல் 15 சதவீதம் குறைந்துள்ளன. வாகன விபத்து வழக்குகள் 2024 ல் 6 சதவீதம் குறைந்துள்ளது. 2024 ல் கூட்டுக்கொள்ளை வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட வில்லை. 2024 ல் 28 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 75 சதவீதம் அதிகமாகும்.
ராமநாதபுரம் நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் திறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிக்கல், முதுகுளத்துார், ஏர்வாடி, தேவிபட்டினம் பகுதிகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் இருந்து தொலைவில் உள்ள கிராமங்களான முத்தனேரி, புதுமடம், நாரையூரணி, ஆகிய கிராமங்களில் புதியதாக 634 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 312 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல் திருட்டில் 154 வழக்கில் 289 பேர் கைது செய்யப்பட்டனர். இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம் என்றார்.

