/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டுமாடுகளால் பயிர்சேதம், நிவாரணம் வரல... குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
காட்டுமாடுகளால் பயிர்சேதம், நிவாரணம் வரல... குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
காட்டுமாடுகளால் பயிர்சேதம், நிவாரணம் வரல... குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
காட்டுமாடுகளால் பயிர்சேதம், நிவாரணம் வரல... குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : ஏப் 26, 2025 04:18 AM

ராமநாதபுரம் : பருத்தி, நெல், நிலக்கடலை பயிர்களை காட்டு மாடுகள், காட்டு பன்றிகள் சேதப்படுத்துகின்றன.செப்., அக்.., மழை நீரில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு இதுவரை நிவாரணம் அறிவிக்கவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குநர்(பொ) பாஸ்கர மணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கூட்டடத்தில் நடந்த விவாதம்:
மிக்கேல், விவசாயி, பொன்னக்கனேரி, முதுகுளத்துார்: எட்டிவயல் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த மிளகாய் வளாகத்தில் போதிய குடிநீர், கழிப்பறை வசதியின்றி விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
கலெக்டர்: மிளகாய் வணிக வளாகத்தில் குடிநீர் தொட்டிகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலகிருஷ்ணன், சோழந்துார்: கோடை காலத்தை பயன்படுத்தி ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்கள், அதன் வரத்துகால்வாய்கள், கண்மாய்களை துார்வார வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
கலெக்டர்: பொதுப்பணித்துறை(நீர்வளம்) மூலம் ரூ.14 கோடியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம், கண்மாய் துார்வாரும் பணிகள் இவ்வாண்டு நடைபெற உள்ளது.
முத்துராமு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர், ராமநாதபுரம்: அக்., நவ., மாத மழையில் பல ஆயிரம் ஏக்கரில் விளைச்சல் நிலங்கள் சேதமடைந்துள்ளது. ஆனால் இதுவரை வெள்ள நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பு முடிந்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் நிவாரணம் குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
சத்திய மூர்த்தி, கீழத்துாவல்: முல்லை பெரியாறு நீர்ப்பாசன முறையில் ராமநாதபுரத்திற்கு நீர் பங்கீடு இருந்தது. தற்போது உள்ளதா. அப்படி இருந்தால் அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
கலெக்டர்: வைகை ஆற்று பாசனநீர் முறைப்படி கிடைக்கிறது. பழைய முல்லை பெரியாறு நீர்பாசனம் முறையில் ராமநாதபுரத்திற்குரிய பங்கு, அதன் தற்போதைய நிலை குறித்து பொதுப்பணித்துறை மூலம் உங்களுக்கு பதில் தரப்படும்.
கோதாவரி, ராமநாதபுரம்: ஆடு, மாடுகள் விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து புகார் அளித்தாலும் போலீசார் கண்டு கொள்வது இல்லை. பழைய முறையில் பவுண்டரி அமைத்து கால்நடைகளை அடைத்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர். அதுபோல தற்போதும் செய்ய வேண்டும்.
கலெக்டர்: உங்கள் ஊரில் கால்நடை வளர்ப்போரிடம் பிரச்னை குறித்து பேசி முடிவு செய்யுங்கள். அபராதம் விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
கனக விஜயன், மாலங்குடி: சிறு, குறு விவசாயிகள் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி அதற்குரிய சான்றிதழ் வழங்க வேண்டும்.
கலெக்டர்: தாலுகா வாரியாக முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீரமணி, ஆர்.எஸ்.மங்கலம்: நீர்நிலைகளில் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் வெங்காய தாமரை வளர்ந்துள்ளன. இவற்றை அழிக்கும் வண்டுகள் உள்ளதாக வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவற்றை பயன்படுத்த வேண்டும்.
கலெக்டர்: நீர்நிலைகளில் வளர்ந்துள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று கால்நடைகளுக்கு வெப்பகால நோய் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள், வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
கால்நடைத்துறை மூலம் சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும், விவசாயிகளின் புகார் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.