ADDED : ஏப் 02, 2025 05:01 AM
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட மேதலோடையில் குடியிருப்புகள் அருகே உள்ள தெற்கு ஊருணியில் தடுப்புச் சுவர் இல்லாததால் குழந்தைகள், மாணவர்களுக்கு ஆபத்து உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஊருணி அருகே கோயில்கள் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட ஏராளமான வீடுகள் அப்பகுதியில் உள்ளன. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளின் முன்பாக திறந்த வெளியில் ஊருணி நீளவாக்கில் 200 மீ., நீளத்திற்கு உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் ஊருணி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அப்பகுதியில் வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் வீட்டின் முன்பு உள்ள ஊருணி அருகே செல்வதற்கு அச்சப்பட்டு குழந்தைகளை வீடுகளிலே பூட்டி வைக்கின்றனர்.
மொத்தி வலசையை சேர்ந்த தன்னார்வலர் ஸ்ரீதமிழ் கூறியதாவது: மேதலோடையில் உள்ள ஊருணி வீடுகளின் முன்பு உள்ளது. ஆழமான இந்த ஊருணியின் முன்பு வீடுகள் உள்ள நிலையில் எவ்வித தடுப்புச் சுவரும் இன்றி திறந்த நிலையில் உள்ளது.
எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் பொது மக்களின் நலன் கருதி பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்றார்.

