ADDED : ஜூன் 20, 2025 11:46 PM

கமுதி: கமுதி அருகே அரண்மனை மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையை கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
கமுதி பகுதியில் குண்டாறு, கிருதுமால் நதி, மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதியில் ஏராளமான அரிய வகை மயில், புள்ளிமான்கள் வசிக்கின்றன.
இரை மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் மான்கள் வருகின்றன. இந்நிலையில் கமுதி முதுகுளத்துார் ரோடு அரண்மனை மேடு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் இறந்தது.
கமுதி போலீசார் மானை கைப்பற்றி பரமக்குடி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ஒப்படைத்தனர். இதையடுத்து தண்ணீர், இரை தேடி குடியிருப்பு மற்றும் ரோடு பகுதியில் வரும் மான், மயில் உயிரிழந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் உயிரினங்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.