ADDED : ஜூன் 24, 2026 10:59 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தில் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு நுழைந்த மானை நாய்கள் கடித்ததில் இறந்தது.
கமுதி பகுதியில் குண்டாறு, கிருதுமால் நதி, மலட்டாறு, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதியில் ஏராளமான அரிய வகை புள்ளி மான்கள் வசிக்கின்றன. இரை மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் மான்கள் உலா வருகின்றன. இந்நிலையில் முதுகுளத்துார் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேடி வந்தன.
அப்போது அங்கு 5க்கும் மேற்பட்ட நாய்கள் ஒரு மானை துரத்திக் கடித்தன. அங்கிருந்து மக்கள் நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் காயமடைந்த மான் இறந்தது. கிராம மக்கள் சாயல்குடி வனத்துறையினருக்கு தெரிவித்து ஒப்படைத்தனர். இதே போல் தண்ணீர், இரை தேடி குடியிருப்பு மற்றும் ரோடு பகுதியில் வரும் மான்கள், மயில்கள் உயிரிழக்கின்றன.
இதனை தடுக்கும் வகையில் உயிரினங்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
