/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடுகள், வீதிகளில் குளமாக தேங்கிய கழிவுநீர் துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் தவிப்பு நிரந்தர தீர்வு காண கோரிக்கை
/
வீடுகள், வீதிகளில் குளமாக தேங்கிய கழிவுநீர் துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் தவிப்பு நிரந்தர தீர்வு காண கோரிக்கை
வீடுகள், வீதிகளில் குளமாக தேங்கிய கழிவுநீர் துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் தவிப்பு நிரந்தர தீர்வு காண கோரிக்கை
வீடுகள், வீதிகளில் குளமாக தேங்கிய கழிவுநீர் துர்நாற்றத்தினால் ராமநாதபுரம் மக்கள் தவிப்பு நிரந்தர தீர்வு காண கோரிக்கை
ADDED : நவ 06, 2024 05:21 AM

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது பம்பிங் ஸ்டேஷன் களிலும் குழாய்கள் சேதமடைந்து செயல்படவில்லை. இதனால் வீடுகள் அருகே குளம் போல கழிவுநீர் தேங்குகிறது. ரோட்டில் நடக்க முடியாமல் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2013 முதல் செயல்பாட்டில் உள்ளது. நகரில் 12,250 இணைப்புகள் வழங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 6.50 எம்.எல்.டி., கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது. இவற்றை 5 பம்பிங் ஸ்டேஷன்கள், 2 லிப்ட ஸ்டேஷன்கள் மற்றும் மாடக்கொட்டான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் சுத்தம் செய்து கடைசியாக மாடக்கொட்டான் ஊராட்சி சாலை குடியிருப்பு அருகே ஆற்று வாய்க்காலில் கலக்கிறது.
குறிப்பாக நகரில் சிதம்பரம்பிள்ளை ஊருணி, சிங்காரத்தோப்பு, குண்டூருணி, நாகநாதபுரம், இந்திராநகர் ஆகிய இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன. 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. தொடர் பராமரிப்பில்லாத காரணத்தால் குழாய்கள் சேதமடைந்து, அடைப்புகள் காரணமாக கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது.
ரோட்டில நடக்க முடியல
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மழைநீருடன் கழிவு நீரும் நகரில் பல இடங்களில் தேங்கியுள்ளது. குறிப்பாக நகரட்சி 2, 3, 4, 5 வார்டுகளில் கடந்த ஒருவாரமாக குளம்போல கழிவுநீர் தேங்கியுள்ளது. துர்நாற்றத்தால் குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப் போக்கால் பாதிக்கப் படுகின்றனர்.
கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் டெங்கு அச்சத்தில் மக்கள் உள்ளனர். இது தொடர்பான புகாரில் பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். மீண்டும் அன்று இரவே குளம் போல கழிவுநீர் தேங்கி விடுகிறது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நிரந்தர தீர்வு காணுங்க
ராஜாராம் பாண்டியன், 5-வது வார்டு காங்., கவுன்சிலர்: நகரில் பாதாள சாக்கடை தீராத பிரச்னையாக உள்ளது. ஓட்டளித்த மக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. ஈசா பள்ளிவாசல், பாண்டி கண்மாய் சாமி தெரு, அக்ரஹாரம் வீதி, அகில் கிடங்கு வீதி, போஸ்ட் ஆபிஸ், சாலைத்தெரு என பல இடங்களில் கழிவுநீர் ஓடுகிறது.
புகார் தெரிவித்தால் நகராட்சி பணியாளர்கள் சரிசெய்கின்றனர். இருப்பினும் நிரந்தர தீர்வு இல்லாமல் மீண்டும் சில நாட்களில் கழிவுநீர் ஓடுகிறது. எனவே புதிதாக குழாய்களை மாற்றி பம்பிங் ஸ்டேஷன்களை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புதிதாக குழாய்கள் மாற்றம்
கார்மேகம், நகராட்சி தலைவர் இந்திரா நகர், சாலைத்தெருவில் குழாய் சேதம் காரணமாக பம்ப்பிங் ஸ்டேஷன்கள் செயல்படவில்லை. இதனை சரிசெய்ய மதுரையில் இருந்து பணியாளர்கள் வந்துள்ளனர். நகரில் பாதாள சாக்கடை அடைப்பு வாகனம் மூலம் உறிஞ்சு எடுக்கப்படுகிறது. சிங்காரதோப்பு துவங்கி கேணிக்கரை வழியாக செய்யது அம்மாள் பள்ளி வரை புதிதாக குழாய் பதிக்கப்பட உள்ளது.
இதற்காக ரூ.42 லட்சம் நெடுஞ்சாலைத்துறைக்கு பணம் கட்டியுள்ளோம். அவர்களது அனுமதி வந்தவுடன் குழாய் பதிக்கும் பணி துவங்கி ஒருவாரத்தில் முடிக்க உள்ளோம். அதன் பிறகு பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னை வராது என்றார்.