ADDED : செப் 15, 2026 07:13 PM
கமுதி: முதுகுளத்துார், கமுதி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வகையில் அபிராமம் -கமுதி ரோடு புதிதாக அமைக்கப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் போர்வெல் அமைக்கும் பணி முதுகுளத்துார் அருகே விக்கிரபாண்டியபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குளியல் தொட்டியை ஆய்வு செய்தார்.
அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருவதை தடுத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குளியல் தொட்டி பராமரிப்பு பணி செய்ய வேண்டும். பின் முதுகுளத்துார், கமுதி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீ நிகம், தாசில்தார் கோகுல்நாத், பி.டி.ஓ., முருகானந்தவள்ளி உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
