/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா பேட்டை துள்ளி ஆடி பாடிய பக்தர்கள்
/
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா பேட்டை துள்ளி ஆடி பாடிய பக்தர்கள்
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா பேட்டை துள்ளி ஆடி பாடிய பக்தர்கள்
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா பேட்டை துள்ளி ஆடி பாடிய பக்தர்கள்
ADDED : டிச 27, 2024 04:49 AM

ரெகுநாதபுரம்: ராமநாதபுரம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரு நாட்கள் கோலாகலமாக நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பது போல இங்கும் விமரிசையாக விழா நடக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் வல்லபை ஐயப்பன் சன்னதி முன்புறமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் மண்டல பூஜை விழா ஆரம்பமானது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. ரெகுநாதபுரம் முத்துநாச்சி அம்மன் கோயிலில் இருந்து திரண்ட ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் பல வண்ணப் பொடிகளை பூசி, மேள தாளங்கள் முழங்க நடனமாடியவாறு பேட்டை துள்ளியபடி வந்தனர்.
நாட்டிய குதிரைகள் மற்றும் அலங்கார நடனங்கள் நடந்தது.
வல்லபை ஐயப்பன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் ஐயப்பன் வீதியுலா சென்றார். கோயில் அருகே உள்ள பஸ்மக்குளத்தில் தாம்பூல தட்டில் உற்ஸவர் ஐயப்பன் மீது மஞ்சள், பால், பன்னீர், திரவியப் பொடி உள்ளிட்ட பத்து வகையான அபிஷேக தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது.
கருடன் வட்டமிட்டவுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பஸ்மக்குளத்தில் புனித நீராடினர். மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. பக்தர்களுடன் கோயிலை வந்தடைந்தவுடன் உற்ஸவர் மற்றும் மூலவருக்கு தொடர்ந்து நெய்யபிஷேகம் நடந்தது. சுவாமியே சரணம் ஐயப்பா சரணகோஷம் முழங்கினர்.
ஐயப்பன் பக்தி பாடல் பஜனை மற்றும் உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது. கொடி மரத்திலிருந்து கொடிபட்டம் இறக்கப்பட்டது. பூஜைகளை வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். பக்தர்களுக்கு மூன்று வேளையும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
டிச.31ல் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கான பெருவழி பயண யாத்திரை கோயிலில் இருந்து துவங்குகிறது.