/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பங்குனி உத்திரவிழா கோலாகலம் அலகு குத்தி காவடி, பால்குடத்துடன் குவிந்த பக்தர்கள்
/
பங்குனி உத்திரவிழா கோலாகலம் அலகு குத்தி காவடி, பால்குடத்துடன் குவிந்த பக்தர்கள்
பங்குனி உத்திரவிழா கோலாகலம் அலகு குத்தி காவடி, பால்குடத்துடன் குவிந்த பக்தர்கள்
பங்குனி உத்திரவிழா கோலாகலம் அலகு குத்தி காவடி, பால்குடத்துடன் குவிந்த பக்தர்கள்
ADDED : ஏப் 12, 2025 05:25 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து கோலாகலமாக விழா நடந்தது.
ராமநாதபுரம் வழிவிடு முருகன்கோயிலுக்கு உடலில் அலகு குத்தியும், பால்குடங்கள், காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர்.
ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலையில் யாகபூஜையுடன், பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது.
குமாரய்யா கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணியம்சுவாமி, பாலதண்டாயுதசுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் சேதுபதிநகர் வினைதீர்க்கும் வேலவர் கோயில், குயவன்குடி குமர குருபர ஸ்ரீசுப்பையா என்னும் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு அபிேஷகம் பூஜைகளில், பால்குடம், காவடிகளுடன் அதிகாலை 3:00மணிக்கு பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* பூக்குழி விழா: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 85ம் ஆண்டு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலை 10:00மணிக்கு நொச்சியூருணியில் இருந்து பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மத நல்லிணகத்தை பேணும் வகையில் பால்குடம், காவடி எடுத்து வந்த பக்தர்களை முஸ்லிம் ஒருவர் சாம்பிராணி புகையிட்டு வரவேற்றார். விழாவை முன்னிட்டு கோயிலுக்கு செல்லும் வழியில் வண்டிக்காரத்தெரு, அக்ரஹாரத்தெரு, அரண்மனை, சாலைத்தெரு உள்ளிட்ட பல இடங்களில் நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மருத்துவ முகாம் நடந்தது. இரவு 9:00மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், திருவாடானை அருகே கீழ்புளி சுப்பிரமணியர், ஆந்தகுடி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் இருந்தார். பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள், அன்னதானம் நடந்தது.
* பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் உடைவேலின் கீழ் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு 102வது ஆண்டாக நடந்த பூக்குழி விழாவில் காலை 10:00 மணிக்கு எமனேஸ்வரம் ஆதிநாராயணன் பிள்ளையார் கோயிலில் இருந்து பால் குடங்கள் கட்டப்பட்டது. அங்கிருந்து நயினார்கோவில் ரோடு, ஜீவா நகர் சுற்றி வந்த பால் காவடி, வேல் குத்திய பக்தர்கள் மதியம் கோயிலை அடைந்தனர். அங்கிருந்த பூக்குழியில் ஆண், பெண் பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர்.
பின் அரோகரா கோஷம் முழங்க அபிஷேகம் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
*கீழக்கரை அருகே நத்தம் குளபதம் ஊராட்சி வைகை கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று காலை வன்னி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா நடந்தது. மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தில்லையேந்தல் ஊராட்சி தட்டார் மடம் சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று காலை பால்குடம், வேல் காவடி, சிலம்பு காவடி உள்ளிட்டவைகளுடன் கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தட்டார் மடம் வந்தடைந்தது. சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
*தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டை, வடகரை முருகன் கோயிலில் பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடந்தன. விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
*முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயிலில் காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய விதிகளில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்பு முருகன் வள்ளி தெய்வானைக்கு பால் அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் விழாவில் பிள்ளையார் கோயிலில் இருந்து தாலுகா அலுவலகம் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் நடந்தது.
கமுதி அருகே மேலக்கொடுமலூர் குமரகடவுள் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்று சிறப்பு பூஜை செய்தனர்.அபிராமத்தில் இருந்து பால்குடம் வேல் குத்தி ஊர்வலமாக வந்தனர். குமரகடவுள் முருகனுக்கு 33 வகை அபிஷேகம் தீபாரதனை நடந்தது.