/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி ராமாயண வரலாற்று கோயிலில் பக்தர்கள் அவதி
/
தனுஷ்கோடி ராமாயண வரலாற்று கோயிலில் பக்தர்கள் அவதி
ADDED : செப் 12, 2025 02:05 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே ராமாயண வரலாற்று தீர்த்த கோயில் சாலையை புதுப்பிக்க வனத்துறை முட்டுக்கட்டை போடுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமாயண வரலாற்றில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு தனுஷ்கோடி வந்த ராமருக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு மனச்சோர்வு அடைந்தார். இந்நிலையில் தனுஷ்கோடி அருகே சிவபெருமான் தலையில் இருந்து வரும் புனித நீரில் உருவான ஜடாயு தீர்த்தத்தில் ராமர் புனித நீராடி சிவனை தரிசனம் செய்ததால் தோஷம் நீங்கி புதுப்பொலிவு பெற்றதாக கூறப்படுகிறது.
ராமர் இங்கு நீராடியதால் இந்த தீர்த்தம் ஜடாமகுட தீர்த்த குளம் எனவும் இங்கு சிவன் கோயிலும் உள்ளது. இக்கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடக்கில் 1.5 கி.மீ.,ல் அமைந்துள்ளது. இந்த 1.5 கி.மீ.,க்கு செம்மண் சாலை உள்ளதால் பல ஆண்டுகளாக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் இச்சாலை வழியாக புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் இக்கோயில் சுற்றியுள்ள காடுகளை காப்பு காடாக தமிழக அரசு மாற்றியதால் இக்கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை போட்டது. இதனால் 11 ஆண்டுகளாக சாலையை சீரமைக்க முடியாமல், பராமரிப்பின்றி சேதமடைந்தும் குண்டும், குழியுமாகி உள்ளது.
இதனால் வாகனங்களில் பக்தர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் பாரம்பரியமாக சுவாமி தரிசனம் செய்து வந்த ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயிலில் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மகாமகம் இக்கோயிலில் மகா மகம் தான் சிறப்பு திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. 2028ல் மகா மகம் விழா நடக்க உள்ளதால் தமிழக பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடு வார்கள். எனவே வனத்துறை தடையை தளர்த்தி சாலையை சீரமைத்து புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
தனுஷ்கோடி வனத்துறை அதிகாரி கூறுகையில், தனுஷ்கோடி சவுக்கு மரக்காடுகளில் பல்லுயிர்கள் வசித்து வருவதால் இவைகளுக்கு இடையூறு ஏற்படாமலும், சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி 2014 முதல் ஜடாமகுட தீர்த்த குளம் மற்றும் பல இடங்கள் காப்பு காடாக மாற்றப்பட்டது. ஆகையால் இங்கு புதிய கட்டுமானத்திற்கும், சாலையை புதுப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.