UPDATED : அக் 21, 2026 07:02 PM
ADDED : அக் 21, 2026 06:59 PM
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மின்தடை ஏற்படும் நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக தர்மர் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அடுத்த சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் 10 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. அங்கு இரவு நேர மின்தடை அதிகம் உள்ளது. இதே போல் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், சாயல்குடி, கடலாடி, கமுதி, கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் என அனைத்து ஊரக மற்றும் கிராமப் பகுதிகளிலும் மின்தடை மணி கணக்கில் உள்ளது. இதனால் வியாபாரிகள், கைத்தறி நெசவாளர்கள், சிட்கோ தொழில் புரிவோர், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
மருத்துவமனைகள் உட்பட அத்தியாவசிய உயிர் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் சிரமம் உண்டாகிறது. ஆகவே மின் விநியோகத்தை சீர் செய்து அனைத்து தரப்பினரையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மின்தடை நீடிக்கும் சூழலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
