ADDED : செப் 02, 2025 10:56 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடந்தது.
ராமநாதபுரம் ஐயர்மடம் பகுதியில் உள்ள ஊருணியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுனாமி, பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நடந்தது. அப்போது தண்ணீரில் நீச்சல் தெரியாமல் சிக்குவோரை படகு மூலம் எப்படி காப்பாற்றுவது என்றும், கரையோரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டால் கரையில் இருந்து சென்று எப்படி காப்பாற்றுவது என தீயணைப்பு படை வீரர்கள் நேரடியாக செய்து காட்டினர்.
அங்கு இருந்த மக்களிடம் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் இறங்க கூடாது என்றும், ஆபத்தான காலக்கட்டத்தில் தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தனர். பேரிடர் காலங்களில் அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஒத்திகை பயிற்சியில் கலந்து கொண்டனர்.