கடலை வியாபாரி ராமலிங்கம் வாங்கிய நிலங்கள் ராமநாதபுரத்தில் விசாரணை
கடலை வியாபாரி ராமலிங்கம் வாங்கிய நிலங்கள் ராமநாதபுரத்தில் விசாரணை
ADDED : ஜன 08, 2013 05:51 AM
ராமநாதபுரம் : இருபத்து எட்டாயிரம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்துள்ள, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம், ராமநாதபுரம் தொண்டியில் 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க உள்ளதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, தொண்டியில் ராமலிங்கம் பெயரில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதா என, உளவுப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர், தாராபுரம் உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கத்திடம், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அமெரிக்க கடன் பத்திரங்களை, வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடன் பத்திரங்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தொண்டியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்குவதற்காக, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும், இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை பெறுவர் எனவும், தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ராமலிங்கம் பெயரில் தொண்டி, திருவாடானை, ஆர்.எஸ்., மங்கலம் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டுள்ளதா என, உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க ஒராண்டுக்கு முன் அனுமதி கோரும்போதே, இடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கும். ராமலிங்கம், வேறு நபர்கள் பெயரில் நிலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரித்து வருகிறோம். ஒரிரு நாளில் முழு விபரம் தெரியவரும், என்றார்.
