ADDED : செப் 26, 2024 04:38 AM
தொண்டி: தொண்டி அருகே முள்ளிமுனை ஊராட்சிக்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
தொண்டி அருகே முள்ளிமுனை ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு, மீனவர் காலனி என பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இங்கு இரு மாதங்களாக காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அப்பகுதி மீனவப் பெண்கள் கூறுகையில், சமையல் உட்பட அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். கிராமத்தில் மாரியம்மன், காளி உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்றனர். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் செப்.17ல் வெளியானது. இதன் எதிரொலியாக காவிரி குடிநீர் தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக ஊராட்சிக்கு செல்லும் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பணிகள் முடிந்த நிலையில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. முகிழ்த்தகம் ஊராட்சி சோலியக்குடி நீர்த் தேக்க தொட்டிக்கு புதிய மோட்டார் பொருத்தப்பட்டதால் முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சிகளுக்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.