/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்று கால்வாய்களில் பராமரிப்பு பணி இல்லாததால் தண்ணீர்... வருது ஆனா வரல
/
வைகை ஆற்று கால்வாய்களில் பராமரிப்பு பணி இல்லாததால் தண்ணீர்... வருது ஆனா வரல
வைகை ஆற்று கால்வாய்களில் பராமரிப்பு பணி இல்லாததால் தண்ணீர்... வருது ஆனா வரல
வைகை ஆற்று கால்வாய்களில் பராமரிப்பு பணி இல்லாததால் தண்ணீர்... வருது ஆனா வரல
ADDED : அக் 25, 2025 03:59 AM

பரமக்குடி: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து அக்., 20ல் உபரிநீர் திறக்கபட்டது. அக்.,22ல் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகணைக்கு தண்ணீர் வந்தடைந்தது. அங்கிருந்து தண்ணீர் திறந்தபோதும் ஆற்றின்நீர்வழித்தடம் பராமரிப்பு இல்லாததால் 3 நாட்களாகியும் பரமக்குடிக்கு வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் அக்., 20ல் மொத்த உயரம் 71 அடியாக இருந்ததால் பாதுகாப்பு கருதி ஆற்றின் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலையில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகணைக்கு தண்ணீர் வந்தடைந்தது.
தொடர்ந்து அணைப்பகுதியில் ஓரளவு தண்ணீர் நிரப்பப்பட்ட சூழலில், நேற்று மதியம் 12:00 மணிக்கு வைகை ஆறு வழியாக 726 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களில் தலா 490 கன அடி வீதம் பிரித்து விடப்பட்டது. இதன்படி அணையில் இருந்து 1706 கன அடி தண்ணீர் சென்றது.
மேலும் பரமக்குடி நோக்கி வைகை ஆற்றில் தண்ணீர் வரும் நிலையில், இடையிலுள்ள தடுப்பு அணைகள் நிரம்பி ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடையும். இதேபோல் கால்வாய்களில் திறக்கப்பட்ட தண்ணீர் தேவையான கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், வைகை ஆறு உட்பட பிரதான கால்வாய்களில் சீமை கருவேல மரங்கள் மற்றும் நாணல் செடிகள் என அதிக அளவில் அடர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக நீர் வரத்து தடைபடுகின்றது.
ஆங்காங்கே மணல் கொள்ளை கண்காணிக்கப்படாததால் பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி வருவது சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது.
இதனால் கைக்கு எட்டிய உபரி நீர் வாய்க்கு எட்டாமல் போனதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இத்துடன் உபரி நீர் அனைத்து பகுதிகளுக்கும் திருப்பி விடப்பட்டதால் நேற்றிரவு வரை பரமக்குடிக்கு தண்ணீர் வரவில்லை.
ஆகவே வரும் நாட்களில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

