ADDED : மார் 20, 2025 07:08 AM

கமுதி: கமுதி அருகே சேகநாதபுரம் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. சேகநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் சுனைதான் பானு தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் பாண்டீஸ்வரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, முத்தலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராமமூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
கிராமத்தின் முக்கிய வீதிகளில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான பீரோ, மேஜை, நாற்காலி, மின்விசிறி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட கல்வி சீர்வரிசை பொருட்களை முன்னாள் மாணவர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். விழாவில் மாணவர்கள் சார்பில் சிலம்பம், நாடகம், நடனம் மற்றும் அப்துல் கலாம், காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறப்பாக பேசினர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குருசாமி, இக்பால், கண்ணதாசன், முகமது அப்துல்லா, ரமேஷ்குமார் உட்பட பலர் செய்தனர்.