முதியவர், மாற்றுதிறனாளிகள்: தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்
முதியவர், மாற்றுதிறனாளிகள்: தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்
ADDED : ஏப் 13, 2026 05:33 PM

திருவாடானை: திருவாடானை தொகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது.
திருவாடானை தொகுதியில் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் யாரும் விடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருவாடானை தொகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது.
ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு கொண்ட மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கும் வசதி செய்யபட்டுள்ளது. திருவாடானை தொகுதியில் அந்தந்த தாலுகா அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் குழுக்கள் நேற்று காலை புறப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு மண்டல அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், நுண்பார்வையாளர் மற்றும் வீடியோகிராபர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சென்றனர். வாக்காளர்கள் ஓட்டு போது போது ரகசியம் காக்கபட வேண்டும் என்பதற்காக வீட்டுக்குள்ளேயே ஒரு சிறிய மறைவிடம் அமைத்து வழக்கமான ஓட்டுப்பதிவு போலவே வாக்காளர்களின் விரலில் அழியாத மை வைக்கபட்டு தபால் வழங்கபட்டது.
வாக்களித்தபின் ஓட்டு சீட்டை உறையிட்டு மூடி அதிகாரிகளிடம் வழங்கினர். அவை உடனடியாக சீல் வைக்கபட்ட பெட்டியில் போடபட்டன. மூதாட்டிகள் கூறுகையில், வெயிலில் போய் நிற்க முடியலையேன்னு கவலையாக இருந்தது. ஆனா அலுவலர்கள் வீட்டுக்கு வந்து ஓட்டு போட வச்சது சந்தோசமாக உள்ளது என்றனர்.
