வாக்காளருக்கு எஸ்.எம்.எஸ்., தேர்தல் ஆணையம் ஏற்பாடு
வாக்காளருக்கு எஸ்.எம்.எஸ்., தேர்தல் ஆணையம் ஏற்பாடு
ADDED : ஜன 30, 2026 05:32 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அவர்களது அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருவாடானை தொகுதி தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் பொதுமக்கள், தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் தாலுகா அலுவலகங்களுக்கும், தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கும் அலைவதை தவிர்க்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் தொழில் நுட்பத்தைப் புகுத்தியுள்ளது.
திருவாடானை தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்கின்றனர். அலுவலர்கள் விண்ணப்பத்தை அங்கீகரித்து கணினியில் பதிவேற்றம் செய்தவுடன் விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணமும் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப்படுவதால் வெளிப்படைத் தன்மை ஏற்படும். விண்ணப்பம் செய்தவர்கள் தங்களது அலைபேசி எண்ணை சரியாகக் கொடுத்திருந்தால், அனைத்து நிலைகளும் உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றனர்.
