/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறும் மின்வாரிய அலுவலகம்
/
விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறும் மின்வாரிய அலுவலகம்
விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறும் மின்வாரிய அலுவலகம்
விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறும் மின்வாரிய அலுவலகம்
ADDED : பிப் 05, 2024 11:16 PM

கமுதி,-கமுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் சேதமடைந்த நிலையில் அங்கு செயல்படும் மின்வாரிய அலுவலகம் விஷப் பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
கமுதி--அருப்புக்கோட்டை சாலை எட்டுக்கண் பாலம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கமுதி, கோட்டைமேடு, புதுக்கோட்டை உட்பட அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது உட்பட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
சாலையில் இருந்து மின்வாரிய அலுவலக கட்டடம் தாழ்வான இடத்தில் இருப்பதால் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் கட்டடத்தை சுற்றி புதர்மண்டி உள்ளது. இதனால் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் இடிந்து விழும் சூழல் உள்ளது. இந்த சூழ்நிலையில் பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தினந்தோறும் பணிக்கு வரும் பணியாளர்கள் வேறு வழியின்றி ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.
மின்வாரிய அலுவலகம் வளாகத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கட்டடம் அருகே செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்வதால் மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதனால் மின்வாரிய அலுவலகத்திற்கு வருவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மின்வாரிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டவும், மழைநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.