/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் நாளை சந்தனம் களைந்த மரகத நடராஜர் தரிசனம்
/
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் நாளை சந்தனம் களைந்த மரகத நடராஜர் தரிசனம்
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் நாளை சந்தனம் களைந்த மரகத நடராஜர் தரிசனம்
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் நாளை சந்தனம் களைந்த மரகத நடராஜர் தரிசனம்
ADDED : ஜன 01, 2026 06:16 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் நாளை (ஜன.,2ல்) பச்சை மரகத நடராஜர் சிலையில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டு தொடர்ந்து அபிேஷகங்கள் மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இக்கோயிலின் வடக்கு பகுதியில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் தனி சன்னதியில் உள்ளார். அவரின் சிலைக்கு ஒளி, ஒலியால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனத்தால் காப்பிடப்பட்ட அலங்காரத்தில் தரிசனம் தருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவின் போது மட்டும் சந்தனம் களையப்பட்டு புதிய சந்தனக்காப்பு இடப்படுகிறது.
இவ்வாண்டு ஆருத்ரா தரிசன விழா டிச.,25ல் மங்கள விநாயகர் கோயிலில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாணிக்கவாசகப் பெருமான், பஞ்சமூர்த்திகள், மரகத நடராஜருக்கு காப்பு கட்டப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக நாளைகாலை 8:30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் படிகளைதல் நடக்கிறது. அன்று முழுவதும் தொடர்ந்து 32 வகையான அபிஷேகம் ,அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. ஜன., 3 அதிகாலை 1:00 முதல் 2:00 மணிக்குள் மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகம் தீபாராதனைகளுக்கு பின் திரையிடப்பட்டு புதியதாக மரகத நடராஜருக்கு சந்தனம் காப்பிட்டு பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் அதன்பின் தரிசிக்கலாம்.
1000 போலீசார் பாதுகாப்பு எஸ்.பி., சந்தீஷ் கூறியதாவது: உத்தரகோசமங்கை கோயிலில் ஜன.,2, 3 ல் ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகம் வருவர் என எதிர்பார்ப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உத்தரகோசமங்கை சந்திப்பு முதல் உத்தரகோசமங்கை வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். கார், டூவீலர்கள் உத்தரகோசமங்கை சந்திப்பு வழியாக வரலாம்.
கீழக்கரை, சாயல்குடியில் இருந்து வரும் மக்கள் திருப்புல்லாணி சந்திப்பு வழியாக வரலாம். அதே நேரத்தில் அனைத்து வழிகளில் இருந்து வரும் வேன், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் புத்தேந்தல் சந்திப்பு வழியாக மட்டும் தான் வர வேண்டும். திரும்ப செல்லும் போது களரி, திருப்புல்லாணி சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதையில் மட்டும் தான் அனுமதிக்கப்படும். வாகனங்களை நிறுத்த தற்காலிக பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீஸ், ஆயுதப்படை, ஊர்க்காவல் படை என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோயில் வளாகம் 36 சி.சி.டி.வி., கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இதற்காக தற்காலிக கன்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

