/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் ரிசார்ட்டுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
/
ராமேஸ்வரம் ரிசார்ட்டுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
ADDED : ஏப் 19, 2025 12:45 AM

ராமேஸ்வரம்,:கொல்கட்டாவில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் வாங்கிய ரிசார்ட்டை நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் கையகப்படுத்தி நோட்டீஸ் வழங்கினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் சாரதா சிட் பண்ட் நிறுவனம், மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக கொல்கட்டா அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியில் உறவினர் மற்றும் ஆளும் திரிணாமுல் காங்., முக்கிய நிர்வாகிகளை அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியதில் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கொல்கட்டாவை சேர்ந்த டி.எம்.டிரேடர்ஸ் மற்றும் கே.கே.டிரேடர்ஸ் நிறுவனம் மூலம் 2021ல் ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் 60 சொகுசு அறைகள் கொண்ட 'செவன் ஹில்ஸ் ரிசார்ட்டை' வாங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து 2023 ஏப்ரலில் கொல்கட்டா அமலாக்கத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் வாங்கிய ரிசார்ட்டை ஆய்வு செய்தனர். இதன் பின் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் மீண்டும் ராமேஸ்வரம் வந்து ரிசார்ட்டை கையகப்படுத்தினர்.
நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டினர். அதில், 'மறு உத்தரவு வரும் வரை ரூ.30 கோடி மதிப்புள்ள இந்த சொகுசு ரிசார்ட்டை விற்பனை, அன்பளிப்பு, அடமானம் செய்யவோ அல்லது வேறு எந்த வகையிலும் மாற்றவோ அல்லது வாடகை வசூலிக்கவோ கூடாது' என தடை விதித்து அமலாக்கத்துறை துணை இயக்குனர் ஸ்ரீ அருண்கோபால் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
---

