ADDED : ஜன 15, 2024 04:36 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. கோலப்போட்டி, எலுமிச்சை கரண்டி, கரும்பு முறித்தல், கயறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.அழகப்பா பல்கலைத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்துள்ள கணினி பயன்பாட்டியல் துறை மாணவி மு.ரோசன் பாரா மஸ்வின் பெற்றொருடன் வரவழைக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் அருகே நாகாச்சி செல்வவிநாயகர்கோயிலில் பொங்கல் விழா நடந்தது. சுவாமிக்கு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம், ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் நாகா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மாணவர்கள் வேட்டி, மாணவிகள் புடவை அணிந்து வந்தனர். பள்ளித் தாளாளர் வெண்மதிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரேணுகா நன்றி கூறினார். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
* ரெகுநாதபுரம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
* கீழக்கரை அருகே மாயாகுளத்தில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஆதித்தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். திருப்புல்லாணி யூனியன் துணை சேர்மன் சிவலிங்கம் முன்னிலை வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாயல்குடி: சாயல்குடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விஷ்ணுகாந்த் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் முகைதீன் கனி, சுரேஷ்குமார், வனப்பாண்டி, செந்தில் குமார், சங்க பேரமைப்பு நிர்வாகிகள் குருசாமி, முனியசாமி, வீரபாண்டி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆபிதா, அனிபா அண்ணா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
பரமக்குடி: பரமக்குடி வ.உ.சி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மற்றும் பொங்கல் விழா நடந்தது.
சேர்மன் கார்த்திகேயன் தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தாளாளர் முனியாண்டி, நிர்வாகிகள் ஜெயக்குமார், சவரிமுத்து, கோவிந்த ராஜா, ராதாகிருஷ்ணன், லோகநாதமுருகன், உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் பங்கேற்றனர்.