/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவமழை துவங்கியும் பெரிய கண்மாயில் தண்ணீர் இல்லை
/
பருவமழை துவங்கியும் பெரிய கண்மாயில் தண்ணீர் இல்லை
ADDED : அக் 09, 2024 04:38 AM

ஆர்.எஸ்.மங்கலம் ; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் பருவமழை துவங்கியும் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாயில் உள்ள 20 பாசன மடைகள் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாய்க்கு வைகை ஆறு கீழ் நாட்டார் கால்வாய் மூலமாகவும், சருகணி ஆறு மூலமும் பாசனம் கிடைக்கிறது. இந்தப் பாசன கால்வாய்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டன.
தொடர்ந்து முறையாக வரத்துக் கால்வாய்கள் சீரமைப்பு செய்யப்படாததால் பல இடங்களில் வரத்து கால்வாய்களில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும், மண்மேடு ஆகியும் நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே பெரிய கண்மாய்க்கு வரும் நிலை உள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் பெரிய கண்மாய் முழு கொள்ளளவு எட்டுவது கேள்விக் குறியாகவே உள்ளது. பருவமழையால் மட்டுமே பெரிய கண்மாய் நிரம்புவது என்பது சாத்தியமற்றது. பெரிய கண்மாய் முழு கொள்ளளவு எட்டிய ஆண்டுகளில் வைகை ஆற்று நீர் மற்றும் சருகணி ஆற்றின் மூலம் வந்த உபரி நீரால் பெரிய கண்மாய் முழு கொள்ளளவு எட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக பெரிய கண்மாய்க்கு பாசனம் வரும் வரத்து கால்வாய்களை முறையாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு போதிய நீர் வருவது குறைந்து கண்மாய் முழு கொள்ளளவு நீர் நிரப்ப முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
இதனால் பெரிய கண்மாய் பருவமழை துவங்குவதற்கு முன் வறண்டு விளையாட்டு மைதானமாக மாறி விடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், பெரிய கண்மாய்க்கு நீர் வரும் பாசனக் கால்வாய்களை சீரமைத்து வைகை நீர், சருகனி ஆறு மூலம் சிவகங்கை மாவட்ட உபரி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.