/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருத்தி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
/
பருத்தி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 03, 2024 05:58 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் பருத்தி விதைப்பு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது மகசூல் நிலையை எட்டி உள்ளது. குறிப்பாக ஆனந்துார், திருத்தேர்வளை, ஆயங்குடி, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகளும் துவங்கியுள்ளன.
இந்நிலையில் காலம் கடந்து பெய்த மழையால் தாமதமாக முளைத்த நெல் வயல்களிலும், நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வளர்ச்சி குன்றிய நெல் வயல்களிலும் நெற்பயிர்களின் வளர்ச்சி தடைபட்டிருந்ததால் அந்த வகை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை உழவு செய்துவிட்டு நெற்பயிருக்கு மாற்றாக பருத்தி நடும் பணியில் விவசாயிகள் தற்போது ஆர்வம் செலுத்துகின்றனர்.
குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், வண்டல், வரவணி, சீனாங்குடி, சேத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பருத்தி விதை நடவு செய்யப்பட்டு வருகிறது. பருத்தி சாகுபடியை பொறுத்தவரையில் வறட்சியில் அதிக மகசூல் கொடுக்கும் தன்மை உடையது என்பதால் தற்போது விவசாயிகள் ஆர்வம் செலுத்துகின்றனர்.