/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டரின் உத்தரவை புறக்கணிக்கும் வன அலுவலர்; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
/
கலெக்டரின் உத்தரவை புறக்கணிக்கும் வன அலுவலர்; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
கலெக்டரின் உத்தரவை புறக்கணிக்கும் வன அலுவலர்; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
கலெக்டரின் உத்தரவை புறக்கணிக்கும் வன அலுவலர்; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : ஆக 18, 2025 11:26 PM
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பன்றிகள், மான் உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டும் வன அலுவலர் புறக்கணித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக காட்டு பன்றிகள், மான்களால் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 20ல் பரமக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பாதிக்கப்பட்ட 151 விவசாயிகள் வன அலுவலரிடம் நிவாரணம் கோரி மனு அளித்தனர். மேலும் ஜூலை 13 ல் ஊரக்குடி கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பகலில் மட்டுமல்லாது இரவு நேரத்திலும் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்கும் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஜூலை 18ல் கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது குறித்து விளக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வன அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஆக.,13ல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டம் கண் துடைப்பாகவே இருந்தது.
இதனால் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட வன அலுவலர் 151 மனுக்களில் 3 இடம் சம்பந்தமானது என்றும், 23ல் சரியான ஆவணங்கள் உள்ளது என்றும், அதில் 6 விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆகவே நிவாரணம் வழங்குவது தொடர்பாக 100 சதவீதம் அதிகாரம் உள்ள மாவட்ட வன அலுவலர் பொருளாதார இழப்பு ஏற்பட்ட விவசாயிகளை காத்திருக்க வைப்பது முறையற்ற செயலாகும். இது தொடர்பாக கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.