ADDED : ஆக 28, 2026 04:32 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் பயிரிட்டு விவசாயம் செய்தனர். அதன் பிறகு ஒரு சில விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள் விவசாயம் செய்தனர். கடந்தாண்டு போதிய பருவமழை பெய்யாததால் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக கூடுதல் பணம் செலவு செய்து உழவு செய்துள்ளனர். தற்போது பருவமழையை எதிர்பார்த்து முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் உழவுப் பணியில் ஈடுபட்டனர். கீழச்சாக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை டிராக்டரில் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
