/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பல ஆண்டுகளுக்கு பிறகு ரெகுநாத காவிரி கால்வாயில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
/
பல ஆண்டுகளுக்கு பிறகு ரெகுநாத காவிரி கால்வாயில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
பல ஆண்டுகளுக்கு பிறகு ரெகுநாத காவிரி கால்வாயில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
பல ஆண்டுகளுக்கு பிறகு ரெகுநாத காவிரி கால்வாயில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 23, 2025 11:21 PM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பகுதியில் உள்ள ரெகுநாத காவிரி கால்வாய் துார்வாரும் பணி நடந்துள்ள நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் மழைநீர் தேங்கியுள்ளது.
முதுகுளத்துார் பகுதி விவசாயிகளுக்காக காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய் புல்வாய்குளத்தில் துவங்கி எஸ்.பி.கோட்டை, ஆப்பனுார், சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் முதுகுளத்துார், கருமல், காத்தாகுளம், உத்தரகோசமங்கை, கடலாடி உள்ளிட்ட 71 கண்மாய் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். 41 கி.மீ., பரப்பளவு கொண்ட ரெகுநாத காவிரி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கால்வாய் இடம் தெரியாமல் பாலைவனம் போல் மாறியது.
முதுகுளத்துார், கடலாடியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் வீணாகின. மழை தண்ணீரும் கால்வாயில் தேங்காமல் வீணாகியது. ரெகுநாதகாவிரியை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கடந்த சில மாதத்திற்கு முன்பு ரூ.16 கோடியில் துார்வாரும் பணியில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரத்து கால்வாயில் உள்ள சீமைக் கருவேலம் மரங்கள் அகற்றி துார்வாரும் பணி நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக முதுகுளத்துார் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தது. ரெகுநாத காவிரி வரத்து கால்வாயில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் கால்வாயை பயன்படுத்தும் ஏராளமான கண்மாய்கள் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. வயலில் அளவுக்கு அதிகமான தண்ணீரையும் வரத்து கால்வாயில் பாய்ச்சுகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரெகுநாத காவிரி கால்வாயில் தண்ணீர் சென்றதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விவசாயிகள் கூறினர்.

