/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டுபன்றியால் நிம்மதி இழந்த முதுகுளத்துார் விவசாயிகள்; அமைச்சர் தொகுதியில் அவலம்! நெல், மிளகாய் பயிர்கள் சேதம், விபத்தில் பலியாகும் மக்கள்
/
காட்டுபன்றியால் நிம்மதி இழந்த முதுகுளத்துார் விவசாயிகள்; அமைச்சர் தொகுதியில் அவலம்! நெல், மிளகாய் பயிர்கள் சேதம், விபத்தில் பலியாகும் மக்கள்
காட்டுபன்றியால் நிம்மதி இழந்த முதுகுளத்துார் விவசாயிகள்; அமைச்சர் தொகுதியில் அவலம்! நெல், மிளகாய் பயிர்கள் சேதம், விபத்தில் பலியாகும் மக்கள்
காட்டுபன்றியால் நிம்மதி இழந்த முதுகுளத்துார் விவசாயிகள்; அமைச்சர் தொகுதியில் அவலம்! நெல், மிளகாய் பயிர்கள் சேதம், விபத்தில் பலியாகும் மக்கள்
ADDED : செப் 23, 2025 11:52 PM

முதுகுளத்துார்; தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியான முதுகுளத்துார், அதனை சுற்றியுள்ள கமுதி, கடலாடி உள்ளிட்ட இடங்களில் காட்டுப்பன்றிகள் அதிகரித்து நெல், மிளகாய் போன்ற பயிர்களை சேதப்படுத்தியும், பன்றி மோதி மக்கள் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணாமல் அமைச்சர் ஏனோ கண்டும் காணாதது போல உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
கமுதி அருகே மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு செப்.,20ல் டூவீலரில் சென்றவர் மீது காட்டுப்பன்றி மோதியதில் முகமது யாகூப் கனி பலியானார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்குள் காட்டுப்பன்றி நுழைந்து நோயாளிகளை அச்சுறுத்தியும் பொருட்களை சேதப்படுத்தியது. முதுகுளத்துார் மட்டுமின்றி கமுதி, கடலாடி உள்ளிட்ட இடங்களில் காட்டுப்பன்றி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
* விவசாயத்தை கைவிடும் அவலம்:
குண்டுகுளம் விவசாயி முருகேசன் கூறுகையில், கமுதி வட்டாரத்தில் நெல், மிளகாய், பருத்தி, சோளம், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ரூ. பலஆயிரம் நஷ்டத்தால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு நகரப் பகுதிக்கு சென்றுள்ளனர். காட்டுப்பன்றி தொல்லையால் கமுதி வட்டாரத்தில் விவசாயம் அழியும் நிலை உருவாகி வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
* பெயரளவில் நிவாரணம்:
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், கமுதி, முதுகுளத்துார், கடலாடி பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை 150 பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு அளிக்கப்பட்டு முறையாக ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு மனுக்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
தற்போது மூன்று விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு நிவாரண தொகையும் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி முறையாக வழங்கப்படவில்லை.
* கிடப்பில் சுடும் உத்தரவு:
பயிர்கள் சேதம் அடைந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அரசாணை வெளியிட்டு கடந்த ஓராண்டுகள் ஆகியும் இதுவரை செயல்படுத்தாமல் கிடப்பில் விட்டுள்ளனர். விவசாயிகள் காட்டுப்பன்றிகளால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது பொதுமக்கள் அதிகளவில் உள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகம் வர துவங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் ஏராளமான உயிரிழப்புகள் சேதங்கள் அதிகரிக்கும். வனத்துறை அமைச்சர் தொகுதியிலே காட்டுப்பன்றி தொல்லை அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் மக்கள் விவசாயிகள் அச்சமடைகின்றனர் என்றார்.
எனவே முதுகுளத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வும் வனத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.