/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு; கஞ்சம்பட்டி கால்வாயில் வீணாகும் மழைநீர்
/
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு; கஞ்சம்பட்டி கால்வாயில் வீணாகும் மழைநீர்
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு; கஞ்சம்பட்டி கால்வாயில் வீணாகும் மழைநீர்
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு; கஞ்சம்பட்டி கால்வாயில் வீணாகும் மழைநீர்
ADDED : டிச 18, 2024 07:31 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்திற்கான கஞ்சம்பட்டி கால்வாய் சீரமைக்கப்படாமல் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வீணாகி விளை நிலம், குடியிருப்புகளில் புகுந்துள்ளதால் விவசாயிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் மலைச்சாமி கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து துாத்துக்குடி செல்லும் நான்குவழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம் துவங்கி பந்தல்குடி தென் பகுதிகளுக்கு இடைப்பட்டுள்ள பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறாக உருவெடுத்து ரெட்டியாப்பட்டி, மறவர் பெருங்குடி இடையில் உள்ள சுத்தமடம் அருகே கஞ்சம்பட்டி கண்மாய்கு தண்ணீர் வந்து சேருகிறது.
அங்கிருந்து விருதுநகர் மாவட்டம் பரளட்சி, பூலாங்கால், கீழ்குடி கண்மாய்களின் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பம்மநேந்தல் முதல் பெருநாழி காடமங்கலம், அரியமங்கலம், எருமைகுளம், கோவிளாங்குளம், பிள்ளையார் குளம் ஆகிய கண்மாய்கள் வழியாக கரிசல் புலி, பொட்டல் புலி, அவதாண்டை, கொக்காடி, குருவாடி ஆகிய கண்மாய்களில் வழியாக சாயல்குடி அடுத்து கடலில் கலக்கிறது.
இந்த கஞ்சம்பட்டி கால்வாய் துார்வாரப்படாமல் தற்போதைய மழைக்கு விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள கிராம குடியிருப்புகள், வயல்வெளியில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதுதொடர்பாக விருதுநகருக்கு நவ.,ல் வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கஞ்சம்பட்டி கால்வாயை சீரமைக்கவும், அப்பகுதியில் கட்டுமானப்பணிகள் நடப்பதை தடுக்க வேண்டும் என மனு அளித்தோம்.
அதன் விளைவாக கஞ்சம்பட்டி கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2025ல் கஞ்சம்பட்டி கால்வாய் சீரமைப்பு திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றார்.