/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புடலங்காய் காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
/
புடலங்காய் காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ADDED : டிச 18, 2024 07:40 AM

ரெகநாதபுரம், : பருவமழை துவங்குவதற்கு முன்பே ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களான முத்துப்பேட்டை, காரான், கும்பரம், வாலாந்தரவை, பெரியபட்டினம், வண்ணாங்குண்டு, சின்னாண்டி வலசை உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக காய்கறி சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் அதிகளவு தென்னை மரங்கள் மற்றும் பனை மரங்கள் உள்ளன. விளைநிலங்களில் ஊடுபயிராகவும், நிலங்களில் தக்காளி, கத்திரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் பந்தலில் படரக்கூடிய புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவைகளை விளைவித்து அவற்றை ராமநாதபுரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
இப்பகுதியில் விளைவிக்கக் கூடிய காய்களை இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிப்பதால் ருசியும், பருமனும் நிறைந்து காணப்படுகிறது. சின்னாண்டி வலசையை சேர்ந்த காய்கறி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில் தென்னந்தோப்புகள் மற்றும் வீடுகளின் அருகே உள்ள காலியிடங்களில் கடந்த ஆண்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகளின் விதைகளை பத்திரப்படுத்தி மீண்டும் அதனை மழை காலத்திற்கு முன்பாகவே தயார் செய்து மண்ணில் விதைத்து விடுவோம். சமீபத்தில் பெய்த பருவமழை இதற்கு கை கொடுத்துள்ளது.
ரெகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் பெரும்பாலான விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டும் தொழிலாக உள்ளது என்றனர்.