UPDATED : நவ 12, 2026 06:20 PM
ADDED : நவ 12, 2026 06:18 PM
சாயல்குடி: கீழக்கரை, சிக்கல், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் இ–சேவை மையங்களை விவசாயிகள் அதிகளவில் நாடி வருகின்றனர். விவசாயிகள் அரசு நலத்திட்டங்கள், மானியங்கள், காப்பீடு மற்றும் சான்றிதழ்களை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இ–சேவை மையங்களை நாடுகின்றனர்.
தற்போது பயிர் காப்பீடு, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு பெறவும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு பதிவு செய்யவும், அதற்கான அடங்கல் சிட்டா மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றுவதற்கும் வருகின்றனர்.
வேளாண் மானியத் திட்டங்கள், நில ஆவணங்கள், இலவச மின்சார இணைப்பு மற்றும் பெயர் மாற்றம், சிறு குறு விவசாயி சான்றிதழ், பேரிடர் நிவாரண நிதி, உழவர் அட்டை மற்றும் கடன் அட்டை உள்ளிட்டவைகளை பெறுவதற்காக இ–சேவை மையத்திற்கு காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை வரிசையில் நின்று பதிந்து பெற்று செல்கின்றனர். இதனால் இ–சேவை மையங்களில் விவசாயிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
