/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாசன நீருக்கு வரி விதிப்பு விவசாயிகள் அமைப்பு கண்டனம்
/
பாசன நீருக்கு வரி விதிப்பு விவசாயிகள் அமைப்பு கண்டனம்
பாசன நீருக்கு வரி விதிப்பு விவசாயிகள் அமைப்பு கண்டனம்
பாசன நீருக்கு வரி விதிப்பு விவசாயிகள் அமைப்பு கண்டனம்
ADDED : ஜூன் 30, 2025 04:14 AM
ராமநாதபுரம் : பாசனத்திற்கு பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கூறியிருப்பதாவது:
இந்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் ரகுநாத் பாட்டீல் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23 ஆயிரத்து 913 கோடி கன மீட்டர் விவசாய பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
இது மொத்த நிலத்தடி நீர் பயன்பாட்டில் 83 சதவீதம் ஆக உள்ளது. நாடு முழுவதும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதையும், வீணாகும் நீரை சேமிக்கவும், பாதுகாக்கவும் மாநில அரசுகளுடன் இணைந்து 22 வகையான திட்டங்களை செயல்படுத்த ரூ.1600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா உலக பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தம் போட்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் வழங்கும் குடிநீருக்காக கட்டணங்களை விதித்தது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கான பணிகளை பெரிய நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்தியா முழுவதும் சிறு, குறு விவசாயிகளின் குடிநீர், விவசாய பயன்பாட்டிற்கு ஆறு, குளம், நிலத்தடி நீரை சார்ந்தே பணிகள் நடந்து வருகிறது. வட இந்திய நதிகள் வற்றாது ஜீவநதியாக தண்ணீர் வழங்குகின்றன. தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டங்கள் எல்லாம் கிடப்பில் கிடக்குது.
அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் உள்ள நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விவசாய சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. பேரிடர், வறட்சி, கடன் சுமை, பணியாளர்கள் பற்றாக்குறை, பருவ நிலை மாற்றங்கள், இயந்திரங்கள் விலை, இடு பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை என்ற அவலம் தொடர்கிறது.
பிரதமர் இவ்விஷயத்தில் நேரடியாக தலையிட்டு விவசாயிகள் பயன்பாட்டுக்கான நீருக்கு வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கான நீருக்கு வரி விதிப்பு என்பதை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.