ADDED : ஜன 20, 2024 04:30 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் மழையில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி முதுகுளத்துார் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்திருந்தனர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏராளமான கிராமங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்தது. தற்போது சில கிராமங்களில் பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளது. நிவாரணம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விவசாயிகள் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், விவசாய தொழிலாளர் சங்கம் தாலுகா செயலாளர் அங்குதன் முன்னிலை வகித்தனர். அப்போது முதுகுளத்துார் வட்டாரத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தது.
இதையடுத்து சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு மழை வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்த வேண்டி தலைமையிடத்து தாசில்தார் அய்யாதுரையிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஊராட்சி தலைவர்கள் செந்தில்குமார், கனகவள்ளி உட்பட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.