ADDED : ஏப் 24, 2025 06:51 AM

கமுதி: கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மிளகாய் விவசாயத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தாசில்தாரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 5000 ஏக்கருக்கும் அதிகமாக மிளகாய் விவசாயம் செய்தனர். பருவம் தவறி அவ்வப்போது பெய்த மழையால் மிளகாய் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது.
இதனால் செலவு செய்த பணம் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கு தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தினர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு தாசில்தார் காதர் முகைதீனிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அனைத்து கிராமங்களிலும் முறையாக கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடன் மதுரை மண்டல கவுரவ தலைவர் ஆதிமூலம்,மண்டல தலைவர் மதுரை வீரன் உட்பட விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.