/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் செடியுடன் முறையிட்ட விவசாயிகள்
/
மிளகாய் செடியுடன் முறையிட்ட விவசாயிகள்
ADDED : மார் 29, 2025 06:08 AM

ராமநாதபுரம்: பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளுடன் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
கமுதி, முதுகுளத்துார், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் சம்பா, குண்டு மிளகாய் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கடந்த டிச.,ல் பெய்த மழையால் நன்கு வளர்ந்த மிளகாய் செடிகள் அழுகியும், காய்த்த மிளகாய்கள் தரம் குறைந்து நிறம் மாறியுள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கமுதி தரைக்குடி, சேர்ந்தக்கோட்டையை சேர்ந்த விவசாயி மோகன்தாஸ் அவரது நிலத்தில் மழைக்கு சேதமடைந்த மிளகாய் செடியுடன் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.
மோகன்தாஸ் கூறுகையில், எனது 8 ஏக்கரில் ஆர்கானிக் முறையில் சம்பா மிளகாய் சாகுபடி செய்துள்ளேன். பூச்சி மருந்து ரசாயன உரங்கள் பயன்படுத்துவது இல்லை. இங்கு விளையும் மிளகாய் வெளியூர்களுக்கு செல்கிறது. பருவம் தவறிய மழையால் 10 கிலோவிற்கு 2 கிலோ சோடையாகிவிட்டன.
மான், காட்டுபன்றிகளால் சேதம் ஏற்படுகிறது. ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்துள்ளேன். கமுதி பகுதியில் 150 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

