ADDED : ஏப் 04, 2025 06:23 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே வெண்ணத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாசன விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவிபட்டினம் அருகே வெண்ணத்துார் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வெண்ணத்துார், நாரணமங்கலம், பாண்டமங்கலம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள் பயனடைகின்றன. இந்த கடன் சங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்டவைகளில் முறைகேடு நடந்துள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து கடன் வழங்கி கூட்டுறவு சங்க ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி காவிரி, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமையில் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாநிலத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தனபாலன், ஒன்றிய அவைத் தலைவர் சேதுராமன், நிர்வாகிகள் அப்துல் ரஹீம், ராமநாதன் கலந்து கொண்டனர்.

